தமிழகம்

மதுரையில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி இல்லை: 42 நாட்களைக் கடந்தும் 2வது டோஸ் போட முடியாமல் மக்கள் தவிப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் கோவேக்சின் தடுப்பூசி சுத்தமாக இல்லாததால் முதல் தடுப்பூசி போட்டு 42 நாட்களை கடந்தவர்கள் இரண்டவாது தடுப்பூசி போட முடியாமல் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலையில் இதுவரை 37,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 22,850 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், 1,500க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.

தொற்றைத் தடுக்க முழு ஊரடங்கு போட்டிருந்தாலும் அதற்கு முன் இந்தத் தொற்று முழு அளவில் மாவட்டம் முழுவதும் பரவிவிட்டதால் தொற்று பாதிப்பை இன்னும் முழுமையாகத் தடுக்க முடியவில்லை.

அதனால், தமிழக அரசு, கரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவித்து வருகிறது. இதற்கு முன் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

ஆனால், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்களில் போதுமான தடுப்பூசி இருப்பு இல்லாததால் போலீஸார், ஆசிரியர்கள், மற்ற அரசு துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்பட குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்களில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்னும் போட ஆரம்பிக்கவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. தற்போது கோவேக்சின் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த தடுப்பூசியை இரண்டாவது டோஸ் போடுகிறவர்களுக்கு மட்டுமே போடப்பட்டது. முதல் டோஸ் போடுவதற்கு இந்த தடுப்பூசி இருப்பு இல்லை எனக்கூறப்பட்டது.

இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசி வரத்து முற்றிலும் நின்றுவிட்டதால் இரண்டாவது டோஸ் போட வருகிறவர்களுக்கு இந்த தடுப்பூசி இருப்பு இல்லை என்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்களில் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த மகாலட்சுமி (65) கூறுகையில், ‘‘கோவேக்சின் முதல் டோஸ் போட்டு 42 நாட்களை கடந்து விட்டது. ஒவ்வொரு முறையும், இரண்டவாது தடுப்பூசி போடுவதற்காக ஏற்கணவே முதல் தடுப்பூசி போட்ட அருகில் உள்ள எஸ்.எஸ்.காலனி அன்சாரி நகருக்கு சென்றோம்.

ஆனால், அங்கு இருப்பு இல்லை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினர். நேற்று அங்கும் சென்றோம். ஆனால், கோவேக்சின் தடுப்பூசி இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டனர்.

சுகாதாரத்துறை இயக்குனர், அரசு ராஜாஜி மருத்துவமனை டீனிடம் முறையிட்டோம். அவர்களோ, நாங்கள் என்ன செய்வோம்மா, தடுப்பூசி வந்தால் போடபோகிறோம், வந்ததும் அழைக்கிறோம் எனக்கூறினர். எங்களை போல் கோவேக்சின் தடுப்பூசி போட்ட வயதானவர்கள், இந்த பெரும்தொற்று காலத்தில் வீட்டிற்கும், அரசு மருத்துவமனைக்கும் தினமும் அலைகிறோம்.

அதனால், தடுப்பூசி போட்டே எங்களுக்கு தற்போது பலன் இல்லாமல் போய்விட்டது. அரசு தடுப்பூசி இருப்பு இல்லாமலே கடமைக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு செய்கிறோம், ’’ என்றார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இதுவரை மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 273 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 48,720 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. கோவேக்சின் இன்னும் வரவில்லை. தற்போது கோவிஷீல்டு மட்டுமே உள்ளது, ’’ என்றனர்.

SCROLL FOR NEXT