கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த வரும் தொடர் மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கி 50க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த மாதம் துவக்கத்தில் இருந்தே தொடர் மழை பெய்து வருகிறது. யாஸ் புயலால் 25ம் தேதியில் இருந்து மாவட்டம் முழுவதும் சூறை காற்றுடன் கனமழை பெய்தன. கடந்த 3 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத வகையில் பெய்த கனமழையால் ஆறு, கால்வாய்கள் மட்டுமின்றி, பள்ளமான சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின. மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்கள் நிரம்பின. இவற்றில் புத்தேரி குளம் உட்பட 50க்கும் மெற்பட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை தண்ணீர் சூழ்ந்தன.
குலசேகரம், பேச்சிப்பாறை, தெரிசனங்கோப்பு, அருமநல்லூர், நாகர்கோவில், பள்ளம், குழித்துறை, புலியூர்குறிச்சி, ஈசாந்திமங்கலம், திருப்பதிசாரம், ஆளூர், ஆரல்வாய்மொழி உட்பட 50க்கும் மேற்பட்ட சாலைகளில் மழைநீர் ஆறுபோல் தேங்கியும், சாலைகள் சேதமாகியும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று 3வது நாளாக மழை தொடர்ந்தது. மழையின் வேகம் சற்று குறைந்திருந்தாலும் அவ்வப்போது சாரல் பொழிந்தது. சூறைகாற்று இன்று இல்லாததால் மரங்கள் விழுவது, மற்றும் மின்தடை போன்றவை இல்லை.
அதிகபட்சமாக இன்று மைலாடியில் 93 மிமீ., மழை பதிவானது. பேச்சிப்பாறையில் 90 மிமீ., பூதப்பாண்டியில் 32, சிற்றாறு ஒன்றில் 49, களியலில் 60, கன்னிமாரில் 57, கொட்டாரத்தில் 46, குழித்துறையில் 23, நாகர்கோவிலில் 53, பெருஞ்சாணியில் 59, புத்தன்அணையில் 60, சிவலோகத்தில் 47, சுருளகோட்டில் 62, தக்கலையில் 32, இரணியலில் 22, பாலமோரில் 88, மாம்பழத்துறையாறில் 45, கோழிப்போர்விளையில் 38, அடையாமடையில் 59, குருந்தன்கோட்டில் 40, முள்ளங்கினாவிளையில் 26, ஆனைகிடங்கில் 37, முக்கடல் அணையில் 28 மிமீ., மழை பெய்திருந்தது. மாவட்டம் முழுவதும் சராசரி மழை அளவு 50.06 மிமீ., ஆகும்.
நீர்பிடிப்பு பகுதியான பாலமோரில் அதிக மழை பெய்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு தண்ணீர் வரும் அளவு அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 5819 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில் நீர்மட்டம் 43.86 அடியாக உள்ளது. அணையில் இருந்து தொடர்ச்சியாக 6508 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதைப்போல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி நீர்மட்டம் 75 அடியாக உயர்ந்தது. அணைக்கு 5171 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 996 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. சிற்றாறு ஒன்றிற்கு உள்வரத்தாக 2578 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் நீர்மட்டம் 16.70 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1578 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. சிற்றாறு இரண்டில் 16.80 அடி தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு 1450 கனஅடி தண்ணீர் வருகிறது.
மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டியுள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை ஒரே நாளில் 10 அடி தண்ணீர் உயர்ந்தது. இதன் காரணமாக முழு கொள்ளவான 25 அடியை முக்கடல் அணை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது. தொடரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. அணை பகுதிகள் அனைத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை நீடித்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், 300க்கும் மேற்பட்ட சாலையோர மரங்களும் சாய்ந்தன. ஊரடங்கு என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.