சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் காலில் விழுந்து பல்நோக்கு பணியாளர்கள் ஊதியம் கேட்டனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பல்நோக்கு பணியாளர்களுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா முடிந்ததும் பல்நோக்கு பணியாளர்கள் சிலர் தங்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி அமைச்சர் காலில் விழுந்தனர்.
ஊழியர்கள் கூறுகையில், "சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 320 பேர் பணிபுரிகிறோம். பலர் 8 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக ஊதிய உயர்வும் இல்லை. ஊதியமும் முறையாக வழங்குவதில்லை. நாங்கள் தூய்மைப் பணி, நோயாளிகளை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லுதல், காவல் பணி, அறுவை சிகிச்சை அரங்குகள், வார்டுகளிலும் மருத்துவ உதவி போன்ற பணிகளை செய்கிறோம்.
தற்போது கரோனா வார்டிலும் பணி வழங்கப்படுகிறது. மேலும் கரோனா வார்டில் உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்கிறோம். ஆனால் எங்களை முன்களப் பணியாளர்களாக அரசு அங்கீகரிக்கவில்லை.
மேலும் கரோனா வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஓய்வு எடுக்க அறை வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. ஆனால் நாங்கள் கரோனா வார்டுகளில் பணிபுரிந்துவிட்டு, அப்படியே வீடுகளுக்குச் செல்கிறோம்.
எங்களை முன்களப் பணியாளர்களாக அங்கீகரிக்காததால் ஊக்கத் தொகை, கரோனாவால் இறந்தால் நிவாரணத் தொகை கிடையாது" என்று கூறினர்.
இதுகுறித்து முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊதியம் கேட்டு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் முறையிட்ட பல்நோக்கு பணியாளர்கள்.