கரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழக அளவில் கோவை முதலிடத்தில் உள்ளது.
கோவையில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று (மே 26) முதல்முறையாக சென்னையைவிட பாதிப்பு அதிகமாக இருந்தது.
இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (மே 27) பாதிப்பு அதிகரித்துள்ளது. குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையைவிட, தினசரி பாதிப்பு அதிகம் உள்ளதால் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் புதிதாக பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு படுக்கைகள் கிடைக்காத அவலநிலை நீடிக்கிறது.
இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில், "கோவையில் இன்று ஒருநாளைய பாதிப்பு 4,734-ஆக உள்ளது. 2,930 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 43,624 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 2,779 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
4,719 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். 43,624 பேர் சிகிச்சையில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைவிட கோவையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிகப்படியான தொற்று உறுதியாகிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.