கர்நாடக அரசு மேகதாதுவில் அணையைக் கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 27) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
"தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறையைப் போக்க அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கை நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் சரியான நேரத்தில் அறிவிப்பார். சம்பா குறுவைக்கு காவிரி நீர் திறப்பது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார்.
அதேபோல, காவிரி டெல்டா பகுதிகளில் தற்போது தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளது. இதை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மழை நீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகா அரசு மேகதாதுவில் அணையை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது.
திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் என்பதால் இங்கு இன்னும் சில துறைகள் வர வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திட புதிதாக தொழிற்பேட்டை அமைக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் ஆலோசித்து விரைவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழிற்பேட்டை கட்டாயம் கொண்டு வரப்படும்.
அதேபோல, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரை செய்யப்படும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.