கோவை மதுக்கரை ரயில் நிலையத்துக்கு இன்று மதியம் வந்தடைந்த ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரிகள். | படம்:ஜெ.மனோகரன். 
தமிழகம்

ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் வந்தடைந்த 89.28 டன் ஆக்சிஜன்: கோவை, திருப்பூர், ஈரோட்டுக்கு பிரித்து அனுப்பிவைப்பு

க.சக்திவேல்

ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் வந்தடைந்த 89.28 டன் ஆக்சிஜன் கோவை, திருப்பூர், ஈரோட்டுக்கு பிரித்து அனுப்பிவைக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனைப் பெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஒடிசாவில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர் லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்படி, ரூர்கேலாவில் இருந்து 6 டேங்கர்களில் நிரப்பப்பட்ட 89.28 மெட்ரிக் டன் திரவ நிலை ஆக்சிஜன், கோவை மதுக்கரை ரயில் நிலையத்துக்கு இன்று மதியம் வந்தடைந்தது.

பின்னர், 4 ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கோவையில் தேவை அதிகம் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும், ஆக்சிஜன் விநியோக மையங்களுக்கும் அனுப்பப்பட்டன.

இவை போலீஸார் பாதுகாப்புடன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பூர், ஈரோட்டுக்குத் தலா ஒரு டேங்கர் லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கு முன்பு, கடந்த 20, 23-ம் தேதிகளில் ரூர்கேலாவில் இருந்து டேங்கர் லாரிகளில் திரவ நிலை மருத்துவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு இதுவரை மொத்தம் 138.06 மெட்ரிக் டன் ஆக்சிஜன், ரயில் மூலம் கோவை வந்துள்ளது.

SCROLL FOR NEXT