படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

மக்களுக்கு உதவ முன்வரும் அதிமுகவினருக்கு காவல்துறை நெருக்கடி: எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

டி.ஜி.ரகுபதி

மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய முன்வரும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவோம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுப்பதாக, எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் இன்று (மே 27) கூறியதாவது:

’’கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பு மற்றும் பாதிப்புகள் உள்ளன. தமிழகத்திலேயே, கோவையில்தான் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க. வேண்டும். மாவட்டத்தில் உள்ள மின் மயானத்தில் சடலங்களை எரிக்க இடம் இல்லாமல் உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.

அதிகமான வாகனங்களை வைத்து கிருமிநாசினி மருந்துகள் அடிக்க வேண்டும். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்புகள் அதிகம் வருகின்றன. இதைத் தடுக்க முறையான கணிப்புகள் நடத்த வேண்டும். கூடுதலாக கரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும். இச்சூழலில் மக்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம். அதை ஆளும் அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மாவட்டத்தில் அதிமுகவினரைப் பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய அனுமதி அளிப்பதில்லை. நாங்கள் அனுமதி கேட்கும் இடத்தில் இருக்கிறோம். பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்க சென்றால், அதிமுகவினர் மீது வழக்குப் பதிந்து விடுவோம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்’’.

இவ்வாறு எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT