தமிழகத்திலேயே கரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதி - ஆக்சிஜன் வசதி மற்றும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:
“தமிழக முதல்வருக்கு, வணக்கம்.
கரோனா நோய்த்தொற்றின் 2வது அலை தமிழகத்தை மோசமாக பாதித்துள்ளது. இருப்பினும், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் படிப்படியாக சற்று நோய்த்தொற்று குறைந்து வருவது ஆறுதலை அளிக்கிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து மாநிலத்திலேயே அம்மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.
நேற்றைய அரசின் செய்திக்குறிப்பின் படி (26.5.2021) தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 4268 பேர். தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 35707 பேர். (வீடுகள் மற்றும் கேர் மையத்தில் தனிமைப்படுத்தவர்கள் உள்ளிட்டு). கோவை மாநகரில் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை என இரண்டு அரசு மருத்துவமனைகள் உள்ளன. சில தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சைக்காக கோவை மாநகர மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாநகரில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் மரணங்களைத் தவிர்த்திட கோவை மாவட்டத்திற்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்திட வேண்டும். மேலும், ஆக்சிஜனும் கோவை மாவட்டத்திற்கு அதிகமாக வழங்கிட வேண்டும். கரோனா நோய்த் தொற்று அதிகமாக ஏற்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு விரைந்து ஏற்பாடு செய்தால் ஓரளவுக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கும் பயன்படும்.
மாநில அரசு விரைந்து கரோனா நோய்த்தொற்றில் முதல் இடத்தில் உள்ள கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.