கோவை ஒண்டிப்புதூரில் புதிய கரோனா சிகிச்சை மையத்தை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
கோவை ஒண்டிப்புதூரில் உள்ள கதிரி மில்ஸ் வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார்அமைப்பின் சார்பில், 306 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மையத்தை நேற்று தொடங்கிவைத்தார். கோவையில் நடந்த நிகழ்வில் அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன் (வனத் துறை), அர.சக்கரபாணி (உணவுப் பொருள்வழங்கல் துறை), மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: மாவட்டத்தில் 3,100 படுக்கை வசதிகளுடன் 15 கரோனா சிகிச்சைமையங்கள் உள்ளன. ஊராட்சி அளவிலான சிகிச்சை மையங்களையும் தொடங்க அறிவுறுத்தியுள் ளோம். தற்போதைய முழு ஊரடங்கால், கரோனா தொற்று பரவல் பெருமளவில் குறையும். முழு ஊரடங்கின் பலன் அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவை கழகம் மூலமாக, கோவையில் உள்ள 2 பெரிய அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் திரவ வடிவில் நேரடியாக வழங்கப் படுகிறது. பெரிய தனியார் மருத்துவமனைகள், தேவையான ஆக்சிஜனை நேரடியாக தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்கின்றனர். தினமும் ஒரு கிலோ லிட்டர் அளவில் ஆக்சிஜன் பெறக்கூடிய இடைப்பட்ட அளவிலான 18 முதல் 20 தனியார் மருத்துவமனைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து சென்னை கட்டுப்பாட்டு அறை மூலம் பெற்று வழங்கி வருகிறோம்.
அடுத்த 12 மணி நேரத்தில், ஏதாவது ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்தில் தகவல் தெரிவிக்கின்றனர். உடனடியாக அங்கு ஆக்சிஜன் இடமாற்றம் செய்யப்படுகிறது. இன்றைய தேதியில் கோவை மாவட்டத்துக்கு போதிய அளவில் ஆக்சிஜன் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. மாநில அரசில் இருந்து 2 ஆயிரம் மருத்துவர்கள், 7 ஆயிரம் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.