தமிழகம்

போக்குவரத்து தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்: தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

போக்குவரத்து தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பேருந்துகள் இயங்கவில்லை. 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு அலுவலக பணியாளர்களுக்கென குறிப்பிட்ட அளவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனவே, போக்குவரத்து தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவிக்க வேண்டும். அதுபோல், போக்குவரத்து தொழிலாலர்களின் மருத்துவ காப்பீடு மே 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

எனவே, மருத்துவ காப்பீட்டை புதுப்பித்து, கரோனா சிகிச்சையும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்களை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், கரோனா பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT