செங்கை மாவட்டத்தில் ஊரடங்கின்போது வீடு வீடாகச் சென்று காய்கறிகள் விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்க, வரும் மே 31 வரை தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறி, பழங்கள், மளிகைகள், குடிநீர், உணவுகள் கிடைக்க, மாவட்டம் முழுவதும் 1,224 நடமாடும் கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் ஒதுக்கப்பட்ட பகுதியில் காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை பொருட்களை விற்பனை செய்கின்றனர். இந்த திட்டத்துக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. விலையும் குறைவாக உள்ளது.
இந்நிலையில் காய்கறியுடன் வரும் வியாபாரிகள் மூலம் அல்லது வாடிக்கையாளர்கள் மூலம் தொற்று பரவும் அச்சம் நிலவுகிறது. எனவே, காய்கறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: கரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு தளர்வில்லாத முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. ஆனாலும், பொதுமக்களை பாதிக்காத வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவ்வாறு விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இந்த பணியில் ஈடுபடும் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அவர்கள் காய்கறிகளை விற்க அனுமதி தரவேண்டும். மாவட்ட நிர்வாகம் வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.