வேலூரில் தொடங்கிய தடுப்பூசி முகாம். | படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

ந. சரவணன்

வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் தாமதிக்காமல் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என, அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூர் வணிகர் சங்கப் பேரமைப்பு, ஸ்ரீ ஜெயின் சங்கம் சார்பில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (மே 26) தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

"வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 93 ஆயிரத்து 915 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் தடுப்பூசி போட்டதன் மூலம், அங்கு கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எனவே, நம் நாட்டினரும் தடுப்பூசியைத் தயங்காமல் போட்டுக்கொண்டால் கரோனா கட்டுக்குள் வரும்.

தமிழகத்தில் தற்போது 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 லட்சத்து 68 ஆயிரத்து 805 பேர் உள்ளனர். அவர்களுக்காகக் கடந்த 24-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை, 18 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்துக்கு முதல் கட்டமாக 21 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன.

முன்னுரிமை அடிப்படையில் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 இடங்களிலும், வணிகர் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், ரோட்டரி சங்கம், ஜெயின் சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் சார்பில் 6 இடங்கள் என, மொத்தம் 13 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

எனவே, பொதுமக்கள் தங்களையும், தங்களது குடும்பத்தார் மற்றும் உறவினர்களையும் பாதுகாத்துக் கொள்ளத் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்".

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் சங்கரன், சுகதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், நருவீ மருத்துவமனை தலைவர் சம்பத், ஜெயின் சங்கத் தலைவர் ராஜேஷ் ஜெயின், செயலாளர் சுபாஷ் ஜெயின், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு மாவட்டத் தலைவர் ஞானவேலு, செயலாளர் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT