வேலூர் விஐடி பல்கலை.யில் கரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து, சித்த மருந்துகளைப் பார்வையிட்டார். 
தமிழகம்

வேலூர் விஐடி பல்கலை.யில் சித்த மருத்துவ மையம்: அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

ந. சரவணன்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 200 படுக்கை வசதியுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் (வேலூர்), அமலு (குடியாத்தம்), விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசிகண்ணம்மா வரவேற்றார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்துப் பேசியதாவது:

"வேலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல் அலை வந்தபோது, சுமார் 2,700 பேர் சித்த மருத்துவம் மூலம் குணமடைந்தனர். 2-வது அலையில் தற்போது வரை ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர்.

2-வது அலை தொடக்கத்திலேயே விஐடி பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் 352 பேர், குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் 1,254 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சித்த மருத்துவத்தை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் தற்போது விஐடி பல்கலைக்கழகத்தில் மீண்டும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பாரம்பரியமிக்க மருத்துவம், இயற்கை உணவுகளோடு சிறந்த வைத்தியம் பார்க்கப்படும்.

இந்த மையத்தில், கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள், அறிகுறிகள் இல்லாத அல்லது லேசான மற்றும் மிதமான அறிகுறிகள் உடைய நோய்த்தொற்று உறுதிப்படுத்திய பின்னர், உடனடியாக வரும் பட்சத்தில் அதாவது, தும்மல் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி ஆரம்பித்த உடனேயே வரும் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படும்.

சித்த மருந்துகள் மூலம் நீராவி பிடித்தல், மன அழுத்தத்தைக் குறைக்க யோகாசனப் பயிற்சி, சூரிய நமஸ்காரம், ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க தனித்துவமான மருந்துகள் கலந்து கிராம்பு குடிநீர், வைட்டமின் டி அதிகரிக்க சூரிய குளியல், பெரும் கவலையை மறக்க ஊஞ்சல் ஆட்டம், சத்துள்ள உணவு வகைகள், மூலிகை தேநீர், சுவாசக் கோளாறுகளைத் தடுக்க தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி, புதினா, கொத்தமல்லி இலை ஆகியவை கொண்ட மூலிகை சூப் வகைகள், மன அமைதி, எட்டு வடிவிலான நடைபாதையில் நடைப்பயிற்சி, ஆன்றோர்களின் அறிவுரைகள் அடங்கிய புத்தகங்களுடன் கூடிய நூலகம் ஆகியவை இங்கு உள்ளன.

தமிழர்களின் பாரம்பரிய உணவு மற்றும் இயற்கை வாழ்வியல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நோய் வராமல் இருக்க இம்மையம் சிறந்ததாக இருக்கும். இதுபோன்ற தனித்துவமான மருத்துவ சிகிச்சைகளை கரோனா நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதைத் தொடர்ந்து, விஐடி பல்கலைக்கழகத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் சங்கரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், நகர்நல அலுவலர் சித்தரசேனா, சித்த மருத்துவர் சுப்பிரமணியம், மாவட்ட சித்த மருத்துவ ஒருங்கிணைப்பாளர் தில்லைவாணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT