தமிழகம்

கன்னியாகுமரியில் இரு நாட்களாக சூறைக் காற்றுடன் விடாமல் மழை: வீடுகளில் வெள்ளம்

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாட்களாக சூறைக் காற்றுடன் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோர மரங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 11,320 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் இரு நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் கொட்டிய மழை இரவு முழுவதும் நீடித்தது. சூறைக் காற்றுடன் பெய்த மழையால் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், ஈத்தாமொழி, குலசேகரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பரவலாக மரங்கள் சாலையில் விழுந்தன. இதில் மின் கம்பிகள் அறுந்து மின் தடை ஏற்பட்டது. இன்று மாலை வரை மாவட்டத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் இன்றி மக்கள் அவதியடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்வாரியத்தினர் இணைந்து சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

மழை அளவு

குமரி மாவட்டம் முழுவதும் இன்றும் 2-வது நாளாக கனமழை தொடர்ந்தது. கடந்த இரு ஆண்டுகளில் பெய்த மழையின் அதிகபட்ச அளவாக மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரி மழை அளவு 139 மி.மீ. ஆக இருந்தது. அதிகபட்சமாக மைலாடியில் 236 மி.மீ. (23 செ.மீ.) மழை பெய்திருந்தது.

பூதப்பாண்டியில் 150 மி.மீ., சிற்றாறு ஒன்றில் 88, களியலில் 148, கன்னிமாரில் 154, கொட்டாரத்தில் 167, குழித்துறையில் 152, நாகர்கோவிலில் 144, பேச்சிப்பாறையில் 122, பெருஞ்சாணியில் 127, புத்தன் அணையில் 126, சிவலோகத்தில் 86, சுருளகோட்டில் 252, தக்கலையில் 96, குளச்சலில் 76, இரணியலில் 192, பாலமோரில் 130, மாம்பழத்துறையாறில் 148, ஆரல்வாய்மொழியில் 104, கோழிப்போர்விளையில் 145, அடையாமடையில் 69, குருந்தன்கோட்டில் 138, முள்ளங்கினாவிளையில் 138, ஆனைகிடங்கில் 157, முக்கடல் அணையில் 96 மிமீ., மழை பதிவாகியிருந்தது.

கனமழையால் நாகர்கோவில் அருகே புத்தேரி செங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் அங்குள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. இதைப்போல் குளம் உடைப்பு ஏற்பட்டதில் அங்குள்ள சாலை துண்டிக்கப்பட்டது. மேலும் நாகர்கோவில், பள்ளம், சுசீந்திரம், தேரூர், தக்கலை, குழித்துறை, களியக்காவிளை, தாமிரபரணி ஆற்றின்கடை உட்பட மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வீடுகளைச் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் உள்வரத்தாக வந்தது. இதனால் 48 அடி கொள்ளவு கொண்ட பேச்சிப்பாறை நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 11,320 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மழைநீருடன் கலந்து ஆர்ப்பரித்தவாறு பாய்ந்தது. இதனால் திற்பரப்பில் இதுவரை இல்லாத வகையில் தண்ணீர் அபாயகரமாகக் கொட்டியது.

மேலும், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையைக் கடந்து தண்ணீர் பாய்ந்தது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு வலியுறுத்தப்பட்டனர். பேச்சிப்பாறை அணையில் வெள்ள அபாய நிலையை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 6,525 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில் நீர்மட்டம் 71 அடியாக உயர்ந்துள்ளது. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 16.50 அடியாக உள்ள நிலையில், உள்வரத்தாக 1,447 கன அடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு இரண்டின் நீர்மட்டம் 16.60 அடியாக உயர்ந்துள்ள நிலையில், உள்வரத்தாக 560 கன அடி தண்ணீர் வருகிறது. நாகர்கோவில் நகருக்குக் குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 23 அடியாக உயர்ந்தது.

SCROLL FOR NEXT