தமிழகம்

மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல்

ஜெ.ஞானசேகர்

மத்திய அரசைக் கண்டித்து தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் சிலர், திருச்சியில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் 6 மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறி, மத்திய அரசைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்குக் தலைமை வகித்த சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, செய்தியாளர்களிடம் கூறும்போது, "பிரதமர் மோடி, 'விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கப்படும். நதிகள் இணைக்கப்படும். விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் 6 மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர். ஆனால், விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

எனவே, மத்திய அரசைக் கண்டித்துப் போராட்டம் நடைபெறுகிறது. மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டோம். விவசாயிகளைக் காப்பாற்றினால்தான் வருங்கால சந்ததியினரைக் காப்பாற்ற முடியும்" என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT