புதுடெல்லி: யோகா குருவும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் அண்மையில், அலோபதி மருத்துவம் என்பது முட்டாள் தனமான அறிவியல். அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் கரோனாவை குணப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டன. இதற்கு பதிலான ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்” என்றார்.
இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ராம்தேவ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐஎம்ஏ) வலியுறுத்தியது. இதையடுத்து ராம்தேவின் கருத்து பொருத்தமற்றது என அவருக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கடிதம் எழுதினார். இதன்பேரில் ராம் தேவ் தனது கருத்துகளை திரும்பப் பெற்றார்.
இந்நிலையில் ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஎம்ஏ.வுக்கு திறந்த மடல் எழுதியுள்ளார். அதில் 25 கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், "உயர் ரத்த அழுத்தம், முதல் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவுக்கு அலோபதி நிரந்தர நிவாரணம் அளிக்குமா? தைராய்டு, கீல்வாதம், பெருங்குடல் அழற்சி, மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தியல் துறையில் நிரந்தர சிகிச்சை உள்ளதா?
காசநோய் மற்றும் சின்னம்மைக்கு நீங்கள் சிகிச்சையை கண்டறிந்தது போல் கல்லீரல் பாதிப்புகளுக்கு சிகிச்சையை கண்டறியுங்கள். அலோபதி மருத்துவம் 200 ஆண்டுகள் மட்டுமே பழமையானது. இதய ரத்தக் குழாய் அடைப்புக்கு அறுவை சிகிச்சை அல்லாத தீர்வு அலோபதி மருத்துவத்தில் என்ன உள்ளது? கொழுப்பை குறைக்க என்ன சிகிச்சை உள்ளது. ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சை உள்ளதா?" என ராம்தேவ் கூறியுள்ளார்.