தமிழகம்

சுகாதாரத் துறை உத்தரவை மீறி பணியில் ஈடுபடுத்தியதால் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு- கரோனா பணியில் இருந்து கர்ப்பிணிகளுக்கு விலக்கு: தமிழக அரசுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டுகோள்

சி.கண்ணன்

பொது சுகாதாரத் துறையின் உத்தரவை மீறி கரோனா சிகிச்சையில் ஈடுபடுத்தியதாலேயே 8 மாத கர்ப்பிணி சண்முகப்பிரியா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. கரோனா சிகிச்சை பணியில் இருந்து கர்ப்பிணிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள், செவிலியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா. இவர் கரோனாசிகிச்சை பணியில் ஈடுபட்டு வந்தபோது, தொற்றால் பாதிக்கப்பட்டதால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் கார்த்திகா, தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 23-ம் தேதி உயிரிழந்தார். இவர் தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே 8 மாத கர்ப்பிணியாக இருந்தவர்கள்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கரோனா முதல் அலை பரவத் தொடங்கியபோதே, ‘ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சை பணியில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களை ஈடுபடுத்தக் கூடாது. இது, மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும்’ என்று பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறையின் (டிபிஎச்) அப்போதைய இயக்குநர் க.குழந்தைசாமி உத்தரவு பிறப் பித்தார்.

ஆனால், மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையும் (டிஎம்எஸ்), மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகமும் (டிஎம்இ) இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க மறுத்துவிட்டது.

இதனாலேயே, மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கர்ப்பிணி மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்துகரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டிபிஎச் இயக்குநராக இருந்த குழந்தைசாமி ஓய்வு பெற்ற பிறகு, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிகளை கரோனா பணியில் ஈடுபடுத்த தொடங்கினர்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

அவ்வாறு, பொது சுகாதாரத் துறையின் உத்தரவை மீறி அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் சண்முகப்பிரியாவை கரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுத்தியதாலேயே, அவர்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள், செவிலியர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள், அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராமலிங்கம், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வளர்மதி ஆகியோர் கூறியதாவது:

கரோனா சிகிச்சை பணி மிகவும் கடினமானது. எவ்வளவுதான் முழுகவச உடை அணிந்து பணியாற்றினாலும் தொற்று ஏற்பட அதிகவாய்ப்பு உள்ளது. சிகிச்சையின்போது பல மருத்துவர்கள், செவிலியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீவிர தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கர்ப்பிணிகள் எந்த தடுப்பூசியும் போட்டுக்கொள்ள முடியாது என்பதால், எளிதாக தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே,கர்ப்பிணிகளாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டஅனைத்து வகை பணியாளர்களையும் கரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று ஓராண்டாக தமிழக அரசிடம் தெரிவித்து வருகிறோம்.

ஒருசில மருத்துவமனைகளின் டீன்கள் மட்டும் கர்ப்பிணிகளின் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு கரோனா பணியில் இருந்து விலக்கு அளித்துள்ளனர். கர்ப்பிணியாக இருந்த மருத்துவர்கள் கரோனா சிகிச்சையின்போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. எனவே, கரோனாசிகிச்சையில் இருந்து கர்ப்பிணிகளுக்கு விலக்கு அளிக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT