கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட பால் வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர். படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

ஊரடங்கு காலத்திலும் கூடுதல் பால் கொள்முதல்: பால் வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

செய்திப்பிரிவு

தனியாருக்கு விவசாயிகள் வழங்கி வந்த 2 லட்சம் லிட்டர் பாலையும், ஊரடங்கு காலம் என்பதால் ஆவின் கூடுதலாக கொள்முதல் செய்கிறது என்று, பால் வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

கோவையில் உள்ள ஆவின் பாலகங்களில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையிலும், பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்திலும் ஆய்வு செய்த அமைச்சர், செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 16-ம் தேதி முதல் ஆவின் பால் விலை, லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பால் அட்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அரசு அறிவித்த விலை குறைப்பு போக, மேலும் சிறப்பு சலுகையாக அதிகபட்ச சில்லரை விற்பனை விலையிலிருந்து நீல நிற பாக்கெட் பால் லிட்டருக்கு ரூ.3 வரையிலும், ஆரஞ்சு மற்றும் பச்சை நிற பால் ரூ.2 வரையிலும் விலை குறைப்பு செய்து விற்கப்படுகிறது.

கரோனா தொற்று பரவல் காலத்தில், மாதாந்திர பால் அட்டையை தடையின்றி பெற, இணையதளம் மூலமும் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தினசரி 1.78 லட்சம் லிட்டர் தரமான பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் விநியோகத்தை கண்காணிக்க மண்டலம் வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், என்றார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், பால்வளத் துறை ஆணையர் நந்தகோபால், ஆவின் பொது மேலாளர் ரவிக்குமார், முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விவசாயிகள் தனியாருக்கு வழங்கி வந்த பாலையும், ஊரடங்கு காலம் என்பதால் ஆவின் நிலையங்களுக்கு வழங்கி வருகின்றனர். கூடுதலாக 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழக அரசின் புதிய விலைக்கு விற்பனை செய்யப்படாத 11 பாலகங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நாளொன் றுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது” என்றார்.

இதைத்தொடர்ந்து, திருப்பூர் குமரன் சாலை காவலர் குடியிருப்பு பகுதி, வீரபாண்டி பிரிவில் அமைந்துள்ள ஆவின் பாலகங்கள், தாராபுரம் வட்டம் சங்கராண்டாம்பாளையத்தில் அமைந்துள்ள பால் குளிரூட்டு நிலையம் ஆகியவற்றை பார்வை யிட்டார்.

ஆய்வின்போது, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT