தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் அவதியுற்று வருகின்றனர். நோய் முற்றிய நிலையில்உள்ளவர்களுக்கு ரெம்டெசிவிர்,டோசிலிசுமேப் உள்ளிட்ட விலையுர்ந்த மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் கள்ளச்சந்தையில் சிலர் அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
மாத்தூரைச் சேர்ந்தவர் தமிழினியன் என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு செலுத்துவதற்காக மருத்துவர் பரிந்துரையின் பேரில் டோசிலிசுமேப் மருந்தை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். கள்ளச்சந்தையில் இந்த மருந்து ரூ.2 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் விலையில் கிடைக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். அவ்வாறு வாங்கும் மருந்தின் நம்பகத் தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததால் அதை வாங்கவில்லை.
பின்னர், ஆன்லைன் மூலம் அந்த மருந்தை தேடியுள்ளார். அந்த மருந்து தம்மிடம் இருப்பதாக தெரிவித்திருந்த நிறுவனம் ஒன்றில் தனது செல்போன் எண்ணை பதிவு செய்தார். பின்னர், சென்னை, போரூரைச் சேர்ந்த பிரபல ஏஜென்சி பெயரில் இவரை தொடர்பு கொண்ட ஒருவர் ரூ.42,500 பணம் செலுத்தினால் 2 மணி நேரத்தில் மருத்துவமனைக்கே மருந்தை டெலிவரி செய்து விடுவதாக கூறியுள்ளார். இதை நம்பி அவர் கொடுத்த வங்கி கணக்கு எண்ணுக்கு ரூ.42,500 பணம் செலுத்தியுள்ளார். ஆனால் மருந்து வரவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்டத.தமிழினியன் கூறும்போது, "உயிர் பயத்தில் இருக்கும் பொதுமக்கள் மருந்து அவசரத் தேவை என்பதால் முழுமையாக விசாரிக்காமல் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இதையே சாதகமாக்கிக் கொண்டு இதுபோன்ற மோசடியில் சிலர் ஈடுபடுகின்றனர். இவர்களின் மோசடி மூலம் பணத்தை இழப்பதுமட்டுமின்றி மருந்தும் கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த முறைகேடு தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்க உள்ளேன். இதுபோல் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் இதுபோன்ற ஆல்லைனில் விளம்பரம் செய்பவர்களின் உண்மைத் தன்மையை விசாரிக்காமல் ஏமாற வேண்டாம்" என்றார்.