ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகம் - புதுச்சேரி எல்லையில் ஒரே சாலையில் புதுச்சேரி பகுதியில் கடைகள்திறந்து பரபரப்பாக இயங்கின.தமிழகப் பகுதியில் கடைகள்முழுமையாக அடைக்கப் பட்டிருந்தன.
புதுச்சேரி யூனியன் பிரதேசப் பகுதி தமிழகத்தையொட்டி அமைந்துள்ளது. தமிழகப் பகுதிகளும், புதுச்சேரி பகுதிகளும் மாறி மாறி வரும் தன்மை உடையவை.
கரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு நடைமுறையில் வந்துள்ளது. புதுச்சேரியில் பகல் 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளது. கிராமப் பகுதிகளில் இந்த ஊரடங்கால் பயனில்லை என்கின்றனர். உதாரணமாக புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள திருக்கனூரில் ஒரே கடைவீதியில் ஒரு பகுதியில் கடைகள் திறந்திருந்தன. அவை புதுச்சேரி பகுதி. இதன் எதிரே தமிழக பகுதியிலுள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன.
ஒரு பகுதியில் திருக்கனூர் பகுதியில் கடைகள் திறந்து இருக்கும் பகுதி புதுச்சேரியில் வருகிறது. சாலையின் மற்றொரு பகுதி விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டு பகுதியை சேர்ந்தது. இதனால் புதுச்சேரி பகுதியில் வாகன போக்குவரத்து பரபரப்பாகவும், தமிழக பகுதியில் கடைகள் மூடப்பட்டு வாகனங்கள் ஏதுமின்றி காணப்பட்டது.
தமிழக பகுதி மக்கள் பொருட்கள் வாங்க சாலையை கடந்து எளிதாக புதுச்சேரி பகுதிக்கு வந்து சென்றனர். போலீஸார் முடிந்த வரையில் அவர்களை அனுப்பி வைத்தனர். சிலரிடம் கரோனா விழிப்புணர்வு வாசகங்களை தந்து படிக்க வைத்து அனுப்பினர்.
தமிழகமும் புதுச்சேரியில் பின்னி பிணைந்து உள்ளது. புதுச்சேரியில் தற்போது கரோனா தொற்று அதிகளவில் உள்ளது. இரு மாநிலத்திலும் ஒரே வகையில் ஊரடங்கை பின்பற்றினால்தான் கரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.