சேத்தியாத்தோப்பு அருகே பின்ன லூர் கிராமத்தில் டாஸ்மாக்கடை உள்ளது. இக்கடையில் சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கஜேந்திரன் ஆகியோர் விற்பனையாளர்களாக உள்ளனர். தமிழகத்தில் தற்போதைய தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட் டுள்ளன.
இந்நிலையில் பின்னலூர் டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம்நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பின்புற சுவரை துளைபோட்டு உள்ளே இருந்த உயர்ரகமதுபாட்டில்கள் 10 அட்டை பெட்டிகளில், மொத்தம்480 மதுபாட்டில் களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதுகுறித்த தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம், காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீஸார் கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சுவரை துளை போட பயன்படுத்திய சுத்தியல், கடப்பாரை உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் அவ்விடத்திலேயே போட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. போலீஸார் அதனை கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமார் கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.