தனுஷ்கோடி கடற்கரையில் ஆமை குஞ்சுகளை விடும் வனத்துறையினர். 
தமிழகம்

தனுஷ்கோடி கடலில் விடப்பட்ட 19,200 ஆமை குஞ்சுகள்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் ஆமைகள் முட்டையிடும் இடமாக கன்னிராஜபுரம், மூக்கையூர், ஒப்பிலான், ஏர்வாடி, சேதுக்கரை, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்து மண்டபம் வனச் சரகர் வெங்கடேஷ் கூறியதாவது:

ஆமைகள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மே மாதம் வரை தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளுக்கு வந்து முட்டையிடும். இந்த முட்டைகள் நாய், பறவைகளால் சேதமடைவதைத் தடுக்கும் விதமாக அவற்றை சேகரித்து வனத் துறையின் குஞ்சு பொறிப்பகங்களில் அடைகாக்கச் செய்கிறோம். முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியே வந்ததும் கடலில் விடுகிறோம்.

கடந்த ஜனவரியில் இருந்து மே மாதம் வரை முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் இருந்து அரிச்சல்முனை கடற்கரை வரை 19,748 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை பொறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு 19,200 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன என்றார்.

SCROLL FOR NEXT