2 டிஜி மருந்தைப் பரிசோதனைக்காக தெலங்கானாவிலிருந்து புதுச்சேரி கொண்டு வந்தார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
விமானம் மூலம் புதுச்சேரிக்கு இன்று (மே 25) மாலை வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, ஹைதராபாத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய முகக்கவசங்கள், கவச உடைகள், பிராண வாயு செறிவூட்டிகள், கிருமிநாசினி ஆகிய பொருட்களை எடுத்து வந்தார். அதைச சுகாதாரத்துறையிடம் அளித்தார்.
அப்போது, துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது:
"தெலங்கானாவில் 10 பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியேற்புக்கு ஒப்புதல் தரச் சென்றிருந்தேன். தெலங்கானாவுக்கும், புதுச்சேரிக்கும் பல தொண்டு நிறுவனங்களிடம் இருந்து உதவிகள் பெற்றேன். தெலங்கானாவுக்குத் தரும்போது புதுச்சேரிக்கும் தரக் கோரினேன்.
ஆக்சிஜன் செறிவூட்டிகள், 2 டிஜி மருந்தைப் பரிசோதனைக்குக் கொண்டு வந்துள்ளேன். 10 நாட்களுக்குத் தரப்படும் இந்த மருந்தைச் சாப்பிட்டால், நான்காவது நாளிலேயே ஆக்சிஜன், வென்டிலேட்டர் துணையின்றி சுவாசிக்க இயலும். புதுச்சேரி உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஓரிரு வாரத்தில் இம்மருந்து கிடைக்கும்.
தெலங்கானா வாழ் ஹரியாணா மக்கள் தெலங்கானா செஞ்சிலுவை சங்கத்துக்கு நன்கொடை தந்தனர். புதுச்சேரிக்கும் தரக் கோரினேன். புதுச்சேரி செஞ்சிலுவை சங்கத்துக்கு ரூ.5 லட்சம் அளித்தனர்.
ஸ்புட்னிக் தயாரிக்கும் ரெட்டிஸ் ஆய்வகம் 3 இடங்களில் தெலங்கானாவில் உற்பத்தி செய்ய உள்ளது. புதுச்சேரியில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவக் கோரினேன். முயற்சி செய்வதாகக் கூறியுள்ளார்கள். தடுப்பூசி மட்டுமே கரோனாவைக் கட்டுப்படுத்தும். இதுபற்றி முதல்வரிடம் விவாதிக்க உள்ளேன். புதுச்சேரி அரசுடன் இணைந்து கரோனா கட்டுப்பாடு, மாநில வளர்ச்சி ஆகியவற்றிலும் எனது பங்கு இருக்கும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைப்பதில்லை என்ற குறையைச் சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம்.
அரசைக் களங்கப்படுத்துவதை விட...
பிபிஇ கிட் தரம் குறைந்ததாகத் தகவல் வந்தது. குறை இருந்தால் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தால் சரி செய்யப்படும். வெளியே சொல்வதை விட, ஆய்வுக்குச் சென்றிருந்தபோதே செவிலியர்கள் சொல்லியிருக்கலாம். அரசைக் களங்கப்படுத்துவதை விடக் களத்தில் இருக்கும் அதிகாரியிடம் சொல்லலாம்".
இவ்வாறு துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.