செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உண்மை தெரிந்தும் வேண்டும் என்றே பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன என அதிமுக பொதுக்குழுவில் உரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய ஜெயலலிதா, தமிழக எதிர்க்கட்சிகளால் முக்கிய பிரச்சினையாக எழுப்பப்படும் செம்பரம்பாக்கம் ஏரி பிரச்சினை குறித்து விளக்கினார்.
அவர் பேசியதாவது:
அண்மையில் பெய்த பெருமழை, தமிழகத்தை குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களை மிகப்பெரும் அளவில் பாதித்துள்ளது.
இந்த மழை கடந்த 100 ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரும் மழை. எனவே தான் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மிக அதிகம். இந்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைளையும் எனது அரசு மேற்கொண்டு வருகிறது.
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு பல உதவிகள் செய்த கழக உடன்பிறப்புகளுக்கும், தன்னார்வலர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், பல்வேறு அரசுத் துறையைச் சார்ந்த பணியாளர்களுக்கும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் எனது பாராட்டினை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாறு கண்டிராத மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாகத்தான் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி, சில இடங்களில் தரைத்தளம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது என்பது உண்மை அறிந்தோருக்கு தெரியும்.
எனினும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட காலம் தாமதம் ஏற்பட்டது என்றும், மிக அதிக அளவு தண்ணீர் திடீரென திறந்து விடப்பட்டது என்றும், அதற்குக் காரணம் இந்த ஏரியை திறந்து விட நான் உரிய நேரத்தில் உத்தரவிடவில்லை என்றும், ஒரு பொய்ப் பிரச்சாரத்தை பல எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுள்ளன.
சென்னை வெள்ளம் பற்றியும், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றியும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒரு நீண்ட விளக்க அறிக்கையை வெளியிட்ட பின்னரும், மீண்டும் மீண்டும் அதே பொய்யை திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
மழைக் காலங்களில் ஏரிகளில் நீர் அளவு எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பது பற்றி வெள்ளநீர் ஒழுங்கு படுத்துவதற்கான விதிமுறைகளில் உள்ளபடி சம்பந்தப்பட்ட ஏரிக்கு பொறுப்பான பொறியாளர் நடவடிக்கை எடுப்பார் என்று தலைமைச் செயலாளர் விளக்கமளித்தார், விவசாயத்திற்கு அணைகள் திறக்க தற்போது முதல்வரிடம் தானே உத்தரவு பெறப்படுகிறது என்று ஒரு குதர்க்கமான வினாவை எழும்புகின்றனர்.
பாசனத்திற்கு அணைகள் திறக்க முதல்வர் உத்தரவு பெற்று அரசு அளவில் உத்தரவிடுவது என்பது எப்போதும் உள்ள நடைமுறை.
எனவே, விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான உத்தரவு எப்பொழுதும் முதல்வர்தான் வழங்குவார் என்று தெரிந்தும், வேண்டுமென்றே தற்போதுதான் அது போன்ற நடைமுறை உள்ளது என தி.மு.க.வினர் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
1.12.2015 அன்று நான் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்த் தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது என்பதையும், மேலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 45 நீர்த் தேக்கங்களில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது என்பதையும் தெரிவித்திருந்தேன்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், 1.12.2015 அன்று காலை முதலே படிப்படியாக வெளியேற்றப்படும் நீர் எவ்வாறு அதிகரிக்கப்பட்டது என்றும், அது பற்றிய எச்சரிக்கை விடப்பட்டது பற்றியும் தெளிவுபடுத்தி உள்ளார்.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் 75 சதவீத அளவுக்கு தண்ணீர் இருப்பு வைத்திருந்தாலும் நீர் திறப்பு 2 மணி நேரம் மட்டுமே தாமதப்படுத்தி இருக்க முடியும் என்பதையும், பல ஏரிகளில் இருந்து வெளியேறிய நீர் மற்றும் கனமழை காரணமாக அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டதை தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுபற்றி எதிர்க்கட்சியினருக்கு புரியவில்லை என்றால் 8–ம் வகுப்பு கணித பாடத்தில் காலம் மற்றும் வேலை பற்றிய கணக்குகள் பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம்.
தான் கூறும் பொய்யை மேலும் வலிமையாக்க கருணாநிதி முதன்மை தலைமை பொறியாளர் மற்றும் தலைமையிடப் பொறியாளர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக மேலும் ஒரு பொய்யை தெரிவித்துள்ளார்.
தற்போது அடுத்த மாதம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார். உண்மையை மக்களுக்கு விளக்கி தி.மு.க.வின் பொய் முகத்திரையை நீங்கள் கிழித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.