தமிழகம்

குமரியில் கனமழையால் நிரம்பும் அணைகள்: பெருஞ்சாணி நீர்மட்டம் 68 அடியாக உயர்வு

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்த நிலையில் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெருஞ்சாணி நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்தது.

குமரி மாவட்டத்தில் ஏற்கெனவே கோடை மழை கைகொடுத்துள்ள நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழையும் கைகொடுக்கத் தொடங்கியுள்ளது.

கன்னிப்பூ சாகுபடி பணிகள் துவங்கியுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் பருவமழையால் விவசாயிகள் நாற்று நடவிற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் பரவலாக இன்று காலையில் இருந்து கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் சாலையோரக் ஓடைகள், ஆறு, கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 பாசன குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உட்பட அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றன.

பெருஞ்சாணி நீர்மட்டம் 77 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் இன்று 68 அடியாக உயர்ந்தது. அணைக்கு உள்வரத்தாக 611 கனஅடி தண்ணீர் வருகிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணைக்கு 711 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையில் இருந்து 473 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. உபரியாக 238 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 15.8 அடியாக உள்ளது.

சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 15.25 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 79 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு இரண்டில் 15.35 அடி தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு 116 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. மாம்பழத்துறையாறில் 45.28 அடி தண்ணீர் உள்ளது.

இன்று கனமழையுடன் பலத்த காற்று வீசியது. இதனால் மதியத்தில் இருந்து நகர, கிராமப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் குமரி மீன்பிடி துறைமுக தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

SCROLL FOR NEXT