வெள்ளத்தால் சேதமடைந்த மின் கேபிள் வயர்களை மாற்றுவதற்கு, நுகர்வோரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது. மீறி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நுகர்வோர் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, சென்னையில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமாயின. பல வீடுகளில் மின் இணைப்புக்கான கேபிள் வயர் சேதம் அடைந்ததால் மின்தடை ஏற்பட்டது. அதுபோன்ற இடங்களில் புதிய கேபிள் வயர் மாற்ற, சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் மின்வாரிய ஊழியர்கள் பணம் வசூலித்தனர்.
இதுகுறித்து மின்வாரியத்துக்கு ஏராளமானோர் புகார் செய்தனர். இதையடுத்து, வீடுகளில் சேதம் அடைந்த மின்கேபிள்களை மாற்ற நுகர்வோரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக டான்ஜெட்கோ உயர் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான கேபிள் வயர்கள் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் கேபிள் வயர்கள் சேதம் அடைந்தன. இவ்வாறு பாதிக்கப்பட்ட வீடுகளில் மீண்டும் மின் இணைப்பு வழங்குவதற்கு, கேபிள் வயர் வாங்கித் தருமாறு சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் கேட்பதாக நுகர்வோரிடம் இருந்து புகார்கள் வந்தன. சில இடங்களில் மின்வாரிய ஊழியர்களே பணம் வசூலித்து கேபிள் வாங்கிக் கொடுப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சேதம் அடைந்த கேபிள் வயரை மாற்ற சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளது. அதையும் மீறி வசூலித் தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
நுகர்வோர் மையம் வரவேற்பு
இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் டி.சடகோபன் கூறியதாவது:
மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த மின் கேபிள்களை மாற்ற நுகர்வோரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என டான்ஜெட்கோ உத்தரவு பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல, வீடுகளுக்கு மின் இணைப்பு பெற சர்வீஸ் வயரை வீட்டு உரிமையாளரே வாங்கித் தருமாறும் மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். உண்மையில், புதிய மின் இணைப்பு பெற செலுத்தப்படும் கட்டணத்தில் சர்வீஸ் வயருக்கான கட்டணமும் அடங்கும். மேலும், வெள்ளத்தால் சேதம் அடைந்த மின்சார மீட்டர்களையும் கட்டணமின்றி மாற்றித்தர வேண்டும். இப்பணிகளை மின்வாரியம் விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு சடகோபன் கூறினார்.