பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிப்பு

ந. சரவணன்

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி நடைபெறும் முகாம்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர்கள் சிவன் அருள் (திருப்பத்தூர்), கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆகியோர் இன்று (மே 25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

"கரோனா 2-வது அலை தற்போது வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். குறிப்பாக, முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவை காரணமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டிய அவசியம் இருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசு கூறிய கரோனா அறிவுரைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

வெளியே சென்றவர்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்பிய உடன் கை, கால்கள் மற்றும் முகத்தை சோப்புப்போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் கரோனா தொற்றில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தாரையும் பாதுகாக்க முடியும். மேலும், கரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் மற்றொரு கவசமான தடுப்பூசியை தகுதியுள்ளவர்கள் அனைவரும் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு வழிகாட்டுதலின் பேரில், தமிழக அரசின் அறிவுரைபடி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தற்போது கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கம், ஆண்டியப்பனூர் மற்றும் காக்கனாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஜோாலர்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வக்கணம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, நாட்றாம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆர்சிஎஸ் பிரதான சாலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, வாணியம்பாடி நியூடவுன் மற்றும் ஆலங்காயம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்து மேல் நிலைப்பள்ளி, நரியம்பட்டு மற்றும் மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கந்திலி அடுத்த குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே, தகுதியுள்ள அனைவரும் அவர்கள் பகுதிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு சென்று ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.

அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆற்காடு, வாலாஜா, கலவை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 5 அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 29 அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

தடுப்பூசிகள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளதால் தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி ஒன்றே நம்மை பாதுகாக்கும் ஆயுதமாகும்".

இவ்வாறு திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT