பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

பிபிஇ கிட் தரமில்லை என்று குற்றம்சாட்டிய செவிலியர் மூவருக்கு 48 மணி நேரத்தில் விளக்கம் தர புதுச்சேரி சுகாதாரத்துறை மெமோ

செ. ஞானபிரகாஷ்

கரோனா வார்டில் பணிபுரியும்செவிலியருக்கான பாதுகாப்பு கவச உடை (பிபிஇ கிட்) தரமில்லை என்று குற்றம்சாட்டிய செவிலியர்கள் மூவரும் 48 மணி நேரத்தில் விளக்கம் தர புதுச்சேரி சுகாதாரத்துறை மெமோ தந்துள்ளது.

கரானோ பெருந்தொற்றால் மருத்துவ அதிகாரி மோகன்குமார், செவிலியர் அதிகாரி நிரஞ்சனா, சுகாதார ஆய்வாளர் ஆனந்த், நர்சிங் ஆர்டர்லி ரங்கநாதன், அனுசுயா, வார்டு அட்டெண்டன்ட் மாயகிருஷ்ணன் மற்றும் ஒய்வு பெற்ற பைலேரியா இன்ஸ்பெக்டர் பக்கிரி ஆகியோர் அடுத்தடுத்து கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதற்கு அரசு மீதும், சுகாதாரத்துறை செயலர் மீதும் குற்றம்சாட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கோஷம் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், "தரமற்ற பாதுகாப்பு உடை (பிபிஇ கிட்) புதுச்சேரியில் வழங்கப்படுவதாகவும், நன்கொடை பெற்று இவ்வுடையை பெறுகிறோம். ஆளுருக்கும் கடிதம் அனுப்பியும் பலனில்லை" என்று சுகாதாரத்துறையில் செவிலியர் சராமரியாக குற்றம்சாட்டினர். பிபிஇ கிட் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்த திமுக வலியுறுத்தியது. இதையடுத்து, பாதுகாப்பு கவச உடையில் குறையிருந்தால் விசாரித்து சரி செய்ய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், பிபிஇ கிட் விவகாரம் தொடர்பாக செவிலியர் அனுராதா, சாந்தி மற்றும் பாக்கியவதி (புதுச்சேரி செவிலியர் சங்கத்தலைவி) 3 பேருக்கும் சுகாதாரத்துறை மெமோ அனுப்பியுள்ளது. அதில், ‘‘உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்காமல் மருத்துவமனைகளுக்கு தரப்பட்டுள்ள பிபிஇ கிட் தரம் பற்றி பத்திரிக்கைகளுக்கு செய்தி தந்துள்ளீர்கள். அது தொடர்பாக, தகுந்த ஆதாரங்கள் உடன் 48 மணி நேரத்தில் விளக்கம் தரவேண்டும். இது, இந்திய அரசின் உயர்மட்டத்துக்கு, பிபிஇ கிட் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்ற விஷயத்துக்கு உதவும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT