கரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காமல் வழக்கறிஞர் மூலம் மிரட்டல் விடுத்ததாக அரசு மருத்துவக் கல்லூரி டீனுக்குவிளக்கம் கேட்டு விருதுநகர் ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்குப் பதில் அளித்து டீன் அனுப்பியுள்ள கடிதத்தில் ‘தான் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாக’ தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீனாக கடந்த 17-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட சுகந்தி ராஜகுமாரி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்திலும், சுகாதார செயலர் நடத்திய காணொலி ஆய்வுக் கூட்டத்திலும் டீன் சுகந்தி ராஜகுமாரி பங்கேற்கவில்லை. அலுவல் நிமித்தமாகவும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காத அரசு மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரிக்கு விளக்கம் கேட்டு ஆட்சியர் இரா.கண்ணன் நோட்டீஸ் அனுப்பினார்.
அதில், "சுகாதார செயலர் 19-ம் தேதி நடத்திய காணொலி ஆய்வில் கலந்துகொள்ளவில்லை. இதில் சுகாதாரத் துறைச் செயலர் கூறிய கருத்துகள் தொடர்பாக தக்க அவசர மேல் டவடிக்கைகள் எடுக்கும் வகையில் உடனடியாக மாவட்ட ஆட்சியரைச் சந்திக்குமாறு மாவட்ட ஆட்சியரே தொலைபேசியில் அறிவுறுத்தியும் அதை உதாசீனம் செய்து சந்திக்கவில்லை.
இதுதொடர்பாக ஐசக் மோகன்லால் என்னும் நபர் மாவட்ட ஆட்சியரின் தொலைபேசியில் தொடர்புகொண்டு “தான் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மூத்த வழக்கறிஞர் என்றும், மாவட்ட ஆட்சியரின் ஆய்வில் டீன் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் மாவட்ட ஆட்சியர் கூட்டத்துக்கு டீனை அழைக்கும் பட்சத்தில் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் எனவும் மிரட்டல் விடுத்தார்.
இதுபோன்ற அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் தனி நபரைக் கொண்டு மிரட்டல் விடுப்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 18-ஐ மீறிய செயலாகும். இதில் இருந்து இயற்கைப் பேரிடரான கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக முக்கியப் பங்காற்ற வேண்டிய அரசு மருத்துவக் கல்லூரி டீன் தனது பணியில் அலட்சியமாகவும், அசிரத்தையாகவும் மேலதிகாரிகள் உத்தரவை உதாசீனப்படுத்தும் விதத்தில் செயல்பட்டுள்ளார்.
இதற்காக ஏன் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான விளக்கத்தை 48 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்” எனக் கூறியிருந்தார்.
இதற்கு, அரசு சுகாதார செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு டீன் சுகந்தி ராஜகுமாரி அனுப்பிய விளக்கக் கடிதத்தில், ‘கரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டத்துக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அலுவலகப் பணி முடிந்து மதுரையில் உள்ள எனது வீட்டுக்கு வந்தபின்னரே மருத்துவமனை ஆர்எம்ஓ இதுபற்றி தகவல் தெரிவித்தார்.மாவட்ட ஆட்சியர் தொலைபேசியில் அழைத்ததால் என்னால் உடனடியாகச் செல்ல முடியவில்லை. மறுநாள் சென்று சந்திக்கத் திட்டமிட்டிருந்தேன்' என கூறியுள்ளார்.
மேலும், வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் தனது கணவர்தான் மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசியதாகவும், மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் பேசவில்லை என்றும், இதுபோன்ற சூழ்நிலையில் தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாத காரணத்தால் விடுமுறையில் செல்வதாகவும், மேலும் விருப்ப ஓய்வுபெற விரும்புவதாகவும் டீன் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்துள்ளார்.