திருவாரூர் அருகே வேன் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருடன் போலீஸார். 
தமிழகம்

வேன் ஏற்றி பெண் கொலை; 4 பேர் கைது: அமெரிக்காவில் இருந்து திட்டம் தீட்டிய கணவர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரகாஷ்(33). அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயபாரதி(30). கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்த ஜெயபாரதி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, திருவாரூர் அருகே உள்ள கடாரம்கொண்டான் கிராமத்தில் உள்ள தனது தந்தை சிதம்பரம் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்தார். மேலும், தப்பளாம்புலியூரில் உள்ள அஞ்சலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார்.

கடந்த 21-ம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஜெயபாரதி மீது மினிவேன் மோதியதில், அவர் உயிரிழந்தார். இது முதலில் விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஜெயபாரதியின் தந்தை சிதம்பரம் கொடுத்த புகாரின்பேரில், திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதில், மினிவேன் உரிமையாளரான பவித்ரமாணிக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் (40) போலீஸார் விசாரித்தபோது, அமெரிக்காவில் உள்ள ஜெயபாரதியின் கணவர் விஷ்ணுபிரகாஷ் தூண்டுதலின்பேரில் இக்கொலை நடந்தது தெரிந்தது. இதையடுத்து, செந்தில்குமார், மினிவேனை ஓட்டிவந்த பட்டீஸ்வரம் பிரசன்னா (24), உடந்தையாக இருந்த ஓகை கிராமம் ராஜா(44), குடவாசல் சித்தாநல்லூர் ஜெகன் (37) ஆகிய 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். விஷ்ணு பிரசாத் மீது வழக்கு பதிவு செய்து, அவரை இங்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT