புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1999-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதியால், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. 2008-ல் மாவட்டந்தோறும் தொழிலாளர் உதவி ஆணையர், சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகங்கள் தனியாக உருவாக்கப்பட்டன.
தொழிலாளர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 18 அமைப்புசாரா நல வாரியங்களில், கட்டுமானம், உடலுழைப்புத் தொழில், ஓட்டுநர், மண்பாண்டத் தொழில், முடிதிருத்துவோர், ஓவியர், பாதையோர வணிகர்கள், விசைத்தறி, கைத்தறி, தீப்பெட்டித் தயாரிப்பு, சலவை, காலணி செய்தல் உள்ளிட்ட 69 தொழில்களில் ஈடுபட்டுள்ள, 18 முதல் 60 வயது வரையிலான தொழிலாளர்கள் பதிவு செய்து, பயனடைந்து வருகின்றனர்.
கடந்த மே 20-ம் தேதி வரை 28 லட்சத்து 24 ஆயிரத்து 634 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து, ஊனம், இயற்கை விபத்து மரணம், ஈமச் சடங்கு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கரோனா தொற்றின் 2-ம் அலை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நிலுவையில் உள்ள அனைத்து பதிவு மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து, நலத் திட்ட உதவிகள் தொய்வின்றிக் கிடைக்கும் வகையில் துரிதமாக செயல்படுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து, தமிழகத்தில் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தொழிலாளர் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
முக்கிய ரயில் நிலையங்களில் தொழிலாளர்கள், அலுவலர்களைக் கொண்ட உதவி மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. மேலும், கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன், வாரியங்களில் பதிவு செய்யாத அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களையும் விடுபடாமல் பதிவு செய்ய, சிறப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.