அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரசு அதிகாரிகளை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாக பார்க்க வேண்டும். அவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் அண்ணா கூறியுள்ளார். அரசுப் பணியில் கட்சியினரின் தலையீடு இருக்கக் கூடாது என்பதுதான் அதன் பொருள். ஆனால், இதற்கு முற்றிலும் முரணாக திமுகவினரின் செயல்பாடுகள் உள்ளன.
சென்னையில் கரோனா தடுப்புப் பணியில் நன்கு பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள், சுகாதாரம், பொறியியல், வருவாய்த் துறை பணியாளர்களுடன் இணைந்து திறம்பட பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வந்தாலும், சென்னையில் சற்று குறைந்து வருகிறது.
இந்தச் சூழலில், சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு திமுகவினர் சென்று, தற்போது உள்ள களப்பணியாளர்களை நீக்கிவிட்டு அவர்கள் சொல்லும் நபர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று மிரட்டியதாகவும், அதற்கு அதிகாரிகள் ‘கட்சிகளின் பரிந்துரையில் களப்பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படுவதில்லை. களப்பணியாளர்களை மாற்றினால் நோய்த்தடுப்பு பணியில் தொய்வு ஏற்படும்’ என்று எடுத்துக் கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதுபோன்ற முறையை அனைத்து இடங்களிலும் திமுகவினர் கடைப்பிடித்தால் கரோனா தொற்று தடுப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்வருக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகும்.
எனவே, கரோனா தடுப்புப் பணிகள் தொய்வின்றி நடக்க, முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.