தமிழகம்

செங்கல்பட்டு, கிண்டி, குன்னூரில் உள்ள ஆலைகளில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சரிடம் மருத்துவர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலை தடுக்க செங்கல்பட்டு, கிண்டி, குன்னூரில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையிலான நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த மருத்துவ பட்டமேற்படிப்பு மருத்துவர்களுக்கான கலந்தாய்வை நடத்த உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்த அவர்கள், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

இதுதொடர்பாக குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியது:

கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் செங்கல்பட்டு, கிண்டி மற்றும் குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையங்களில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்சிஜன் உற்பத்திக்கான பிளான்ட் உருவாக்க வேண்டும். கரோனா பரிசோதனை மற்றும் கரோனா நோயாளிகளுக்கான அடிப்படை ரத்த பரிசோதனைகளை அனைத்து மருத்துவமனைகளிலும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவர்கள் பணிநியமனத்தை எம்ஆர்பி மூலம் நிரந்தர அடிப்படையில் செய்தால் மருத்துவர்கள் ஆர்வமுடன் பணியில் சேர்வதற்கு முன்வருவார்கள். போதுமான அளவு செவிலியர்கள், ஆய்வுகூட பணியாளர்கள் உள்ளிட்டோரை பணி நியமனம் செய்யவேண்டும். நம்முடைய மருத்துவக் கட்டமைப்பை இன்னும் வலுப்படுத்தினால், மூன்றாவது, நான்காவது என எத்தனை அலைகள் வந்தாலும் கரோனா தொற்றை சமாளிக்க முடியும் என்பதை தெரிவித்தோம்.

அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு மருத்துவர்கள் உயிரிழக்கும்போது, அரசு மருத்துவர்களின் பங்களிப்பிலேயே, அவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வகை செய்யும் ‘கார்ப்பஸ் பண்ட்’ திட்டத்தை அமல்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவால் உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணத்தை அரசு வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

வரும் ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு,அரசு மருத்துவர்களுக்கு அரசாணைப்படி ஊதியம் கிடைப்பதற்கான அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்க வேன்டும் என்றகோரிக்கைகளை வைத்திருக்கிறோம் என்றார்.

SCROLL FOR NEXT