தமிழகம்

திருச்சியில் விரைவில் கார் ஆம்புலன்ஸ் சேவை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் உள்ளதுபோல திருச்சி மாவட்டத்திலும் கார் ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும் என மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

ஊரடங்கையொட்டி உள்ளாட்சி அமைப்புகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனைத் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்து மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியது:

தமிழகத்தில் கரோனா தொற் றாளர்களுக்கென நாள்தோறும் புதிய படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் 108 ஆம்புலன்ஸ் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி மூலம் 250 கார்களை ஆம்புலன்ஸாக பயன்படுத்தும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதே போல, திருச்சி மாவட்டத்திலும் கார் ஆம்புலன்ஸ் சேவை விரை வில் தொடங்கப்படும் என்றார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சி யர் சு.சிவராசு பேசியது: பொதுமக்களுக்கு காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் வார்டுக்கு 5 வாகனங்கள் வீதம் காய்கறி விற்பனை நடைபெறும். இந்த வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கூட்டுறவுத் துறை சார்பில் மாவட்டத்தில் 203 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே, காய்கறிகளுக்கு தட்டுப் பாடு ஏற்படாது. திருச்சி காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் யாரும் வரக்கூடாது. மீறி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

அரசின் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால்தான் கரோனா பரவலைக் குறைக்க முடியும். அரசின் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண் டும் என்றார்.

தொடர்ந்து, லால்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணியையும், தொட்டியம் வெற்றி விநாயகா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமையும் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில் எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், ந.தியாக ராஜன், எஸ்.ஸ்டாலின்குமார், எம்.பழனியாண்டி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம் கணேஷ், மாநகராட்சி முதன்மைப் பொறியாளர் அமுதவல்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT