திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் அரசு தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார். 
தமிழகம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4-வது சித்த சிகிச்சை மையம்: ஆம்பூரில் அமைப்பு

ந. சரவணன்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4-வது சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஆம்பூரில் அமைக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் முழு ஊரடங்கு நடைமுறை குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 24) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் முன்னிலை வகித்தார்.

மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், கூடுதல் அரசு தலைமைச் செயலாளருமான தென்காசி.எஸ்.ஜவஹர் தலைமை வகித்துப் பேசுகையில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 24 முதல் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.

பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்க மாவட்டம் முழுவதும் 116 நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனாவை ஒழிக்க சிறந்த வழி தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகும். 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விரைவாகத் தடுப்பூசி போட வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 21 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இவற்றை விரைவாகப் போட வேண்டும்.

கிராமப் பகுதிகளில் நோய்ப் பரவலைக் கண்காணிக்க உள்ளாட்சி அமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணைந்து தினமும் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட எல்லைகளில் சோதனைகளை பலப்படுத்த வேண்டும். இ-பதிவு உள்ள வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கரோனா முன்களப் பணியில் ஈடுபடுவோர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு ஊரடங்கு காலத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவி தேவையெனில் கட்டுப்பாட்டு உதவி எண்ணான 94862-42428 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அதேபோல, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள், மருத்துவ உதவிகளை வட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை அல்லது மாவட்டக் கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்புகொண்டு தங்களது தேவைகளைக் கேட்கலாம்" என்றார்.

இதைத் தொடர்ந்து, வாணியம்பாடி சந்தைமேட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் தென்காசி.எஸ்.ஜவஹர் இன்று ஆய்வு செய்தார். பிறகு, வாணியம்பாடி அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தற்காலிகக் கட்டமைப்புப் பணிகள் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டுப்பட்டு வரும் குடியிருப்புக் கட்டிடத்தில் கரோனா சிகிச்சை மையத்தையும் அவர் ஆய்வு செய்தார்.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் 4-வது சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஆம்பூரில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை தென்காசி எஸ்.ஜவஹர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் கடடுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள அவசர தொலைபேசிஎண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வார் அறை எண்:

04179-222111- 229008, 229006,226666, 220020, 221104 மற்றும் கைபேசி எண்: 94429-92526.

வட்ட அளவில் செயல்படும் கட்டுப்பாட்டு மையங்களின் தொலைபேசி எண்கள் :

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் : 04179 – 220093

நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம்: 04179-242499

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம்: 04179-232184, 63798-98929

ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் : 90924-21673

SCROLL FOR NEXT