ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும். ஐடி, தனியார் நிறுவன ஊழியர்கள் 100% வீட்டிலிருந்து பணி செய்ய வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இரண்டு நாள் தளர்வுகளுக்குப் பின் ஒரு வார தீவிர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அவசியமின்றி யாரும் வெளியில் வர அனுமதி இல்லை, மளிகைக் கடைகள், காய்கறி, இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி இல்லை. அவசியமின்றி வெளியே வந்தால் நடவடிக்கை என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து ஊரடங்கைக் கடுமையாக்கியுள்ளது அரசு. அதே நேரம் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக காய்கறிகள், கனிகள், முட்டை உள்ளிட்டவை நடமாடும் சிறு கடைகள் மூலம் பொதுமக்களைத் தேடிச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கரோனா நிவாரண நிதியாக ரூ.4000 இரண்டு தவணைகளாக மே, ஜூன் மாதங்களில் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது மே மாத நிவாரணத் தொகை வழங்கிய நிலையில், ஜூன் மாதத்துக்கான நிவாரணத் தொகையும் ஜூன் 3ஆம் தேதிக்குள் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஒரு வார தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் எவ்விதக் கடைக்கும் அனுமதி இல்லை. மருத்துவம் சார்ந்த அத்தியாவசியப் பொருட்களின் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில், ''வரும் மே 31 அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு எவ்விதத் தளர்வுமின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தனியார், ஐடி, மென்பொருள் துறை சார்ந்த ஊழியர்கள் முழுமையாக வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.
ஏடிஎம் வங்கிப் பணி சார்ந்த பணிகளுக்கு அனுமதி. இன்சூரன்ஸ், வங்கிப் பணி சார்ந்த ஊழியர்கள் 3 -ல் 1 பங்கு ஊழியர்கள் மட்டுமே இயங்க வேண்டும்.
ரேஷன் கடைகள் தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.