முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை வெளிப்படையாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் தினசரி கரோனா பாதிப்பு 4,000-ஐ நெருங்கியுள்ளது. இதனால், ஆக்சிஜன் படுக்கையில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை விவரங்களை அறிய மாவட்ட நிர்வாகம் சார்பில் 0422-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, காலி படுக்கை விவரத்தைத் தெரிந்துகொள்ள மாநில அரசின் சார்பில் https://tncovidbeds.tnega.org/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த இணையதளத்தில் உடனுக்குடன் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை.
காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் என நோயாளிகளின் உறவினர்கள் எந்த மருத்துவமனையைத் தொடர்புகொண்டாலும், படுக்கை காலியாக இல்லை என்றே பதில் வருகிறது. எனவே, காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கரோனா நோயாளிகள் பயன்பெற ஏதுவாக, மொத்தமுள்ள படுக்கைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், தற்போது கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்துவரும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறலாம் என, தமிழக அரசு கடந்த 22-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், "அதிதீவிர மற்றும் அதிதீவிரமில்லாத அனைத்து நோயாளிகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்றுக் கொள்ளப்படும். தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 104 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் கூறும்போது, "மருத்துவமனைகளில் உள்ள காலி படுக்கைகள் விவரத்தை மக்கள் தெரிந்துகொள்ளும் இணையதளத்தில் காலை, இரவு என இரண்டுமுறை நிலவரத்தைப் பதிவு செய்கின்றனர். மதியம் ஒரு முறையும் படுக்கைகள் நிலவரத்தைப் பதிவு செய்ய மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்படும்.
முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை வெளிப்படையாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.