தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 5,70 லட்சம் வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. சென்னையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் நாட்டி லேயே முதன்முறையாக ரூ.10.75 கோடிக்கு வழக்கு ஒன்று சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.
இந்த ஆண்டுக்கான தேசிய மக்கள் நீதிமன்றம், நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தமிழகம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகள், சட்டப்பிரச்சினை தொடர்பான விவகாரங்கள், நீதி மன்றத்துக்கு வராத வழக்குகள் என 3 பிரிவுகளாக வழக்கு விசாரணை நடைபெற்றது.
மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, காசோலை பிரச்சினைகள், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணம் விநியோகம், குடிநீர் மற்றும் மின் கட்டணம் தொடர்பானை உட்பட 20 வகையான வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
ரூ. 621 கோடி
மொத்தம் 8 லட்சத்து 85 ஆயிரத்து 133 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. இவற்றில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 137 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர் களுக்கு ரூ.621.45 கோடி வழங்கப் பட்டது என்று தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி.டீக்காராமன் தெரிவித்தார்.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நாட்டிலேயே முதல் முறையாக ரூ.10.75 கோடிக்கு வழக்கு ஒன்றில் தீர்வு காணப் பட்டது. பாங்க் ஆப் இந்தியாவில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால், சபரி பவுண் டேசனுக்கு சொந்தமான ரூ.11.65 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏலம் மூலம் விற்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதை எதிர்த்து சென்னையில் உள்ள வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் சபரி பவுண் டேசன் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்பட்டது. ஏற் கெனவே இரண்டு அமர்வாக இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று வழக்கு விசாரிக்கப்பட்டபோது, ரூ.10.75 கோடியை நான்கு தவணை களாக வழங்க சபரி பவுண்டேசன் உறுதி அளித்ததுடன், உடனடி யாக ரூ.58 லட்சத்துக்கான வரைவோலையும் வழங்கியது. அதைத்தொடர்ந்து வழக்கு முடிவுக்கு வந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அதிகபட்சமாக ரூ.4.5 கோடிக்கு ஒரு வழக்கு முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.