பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் சந்தைப்படுத்திட உதவி எண்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

விவசாயிகள் தாங்கள் விளைவித்துள்ள காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களைச் சந்தைப்படுத்திட உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனைத் துறைகள் இன்று (மே 24) வெளியிட்ட அறிவிப்பு:

"தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தடுப்புக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 24.05.2021 முதல் 31.05.2021 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சமயத்தில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் தடையின்றிக் கிடைக்க வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

முதல்வரின் உத்தரவின்படி தோட்டக் கலைத்துறை, வேளாண்மைத் துறை, வேளாண் விற்பனைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இ-வணிக நிறுவனங்கள் மூலமாக, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் பொதுமக்களுக்குத் தடையின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதியில், தினமும் 2,000 வாகனங்கள் மூலம் 1,500 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்களும், இதர மாவட்டங்களில் சுமார் 5,000 வாகனங்கள் மூலம் 3,500 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்களும் ஆக மொத்தம் 7,000 வாகனங்கள் மூலம் சுமார் 5,000 மெட்ரிக் டன் விநியோகம் செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை ஆங்காங்கே விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை விவசாயிகள், விவசாய ஆர்வலர் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலமாகக் கொள்முதல் செய்து விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் விவசாயிகளால் கொண்டு வரப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் நகரின் இதர பகுதிகளில் விற்பனை செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியானவற்றை ஒரு இடத்திலிருந்து சந்தைகளுக்குக் கொண்டு செல்லவும், ஆங்காங்கே எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தேவையான அனுமதி வழங்கியுள்ளது.

எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்துள்ள காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களைச் சந்தைப்படுத்திட அல்லது அடுத்த மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல தேவையான அனுமதி பெறவும் மற்றும் உள்ளீடு ஏற்பாடுகள் செய்யவும் அந்தந்த மாவட்டத்தில் அமைந்துள்ள கீழ்க்கண்ட வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குநர்கள், தோட்டக் கலைத்துறை இணை/துணை இயக்குநர்களைத் தொடர்புகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தோட்டக் கலைத்துறைகளின் தலைமையிடத்தில் இயங்கி வரும் கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மூலமாகவும் தகவல் மற்றும் உதவிகள் பெற்றுக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேளாண் விற்பனைத் துறை கட்டுப்பாட்டு அறை எண்: 044-22253884

தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டு அறை எண்: 1800 425 4444

வேளாண்மைத் துறை கட்டுப்பாட்டு அறை எண்: 044-28594338".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT