தமிழகம்

கரோனா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்கும் நிவாரணம்: தமிழக முதல்வருக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம்

கி.மகாராஜன்

கரோனா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஏ.நெடுஞ்செழியன், செயலர் எஸ்.மோகன்குமார் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றால் உயிரிழந்த கீழமை நீதிமன்ற நீதிபதி குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளது. நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் நாணயத்தின் இரு பக்கங்களாவர். நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அந்த வழக்கறிஞர்களின் குடும்பம் வாழ வழியில்லாமல் தத்தளித்து வருகின்றன.

தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்பகுதிகளில் வசிக்கின்றனர். வழக்கறிஞர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம் எதுவும் கிடையாது.

கரோனாவால் அனைத்து வழக்கறிஞர்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். எனவே, தமிழக முதல்வர் கரோனா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT