வேலூரில் காய்கறி, மளிகைப் பொருட்கள் விற்பனைக்காக நடமாடும் வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பெருகி வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 24-ம் தேதி (இன்று) முதல் 31-ம் தேதி வரை, ஒரு வார காலத்துக்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் அத்தியாவசியத் தேவைகளான பால், மருந்து, பெட்ரோல், குடிநீர், நாட்டு மருந்து, நேரக் கட்டுப்பாட்டுகளுடன் உணவகம் ஆகியவை மட்டும் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்ய மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத்துறை சார்பில், நடமாடும் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் பொதுமக்கள் இருப்பிடத்துக்கே கொண்டு சென்று விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்தது.
அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில், நடமாடும் காய்கறி விற்பனை இன்று தொடங்கியது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுண ஐயப்பத்துரை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை வகித்து நடமாடும் காய்கறி, மளிகைப் பொருட்கள் விற்பனை வாகனத்தைத் தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
"வேலூர் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, மே 24-ம் தேதி (இன்று) முதல் வரும் 31-ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசுத் துறைகளான மகளிர் திட்டம், கூட்டுறவுத் துறை, வேளாண்மை, தோட்டக் கலைத்துறை மூலம் மொத்த காய்கறி விற்பனை சங்கம், மொத்த மளிகைப் பொருட்கள் மற்றும் பலசரக்கு விற்பனை சங்கம், ரோட்டரி சங்கங்கள், உள்ளூர் வணிக அமைப்புகள், உள்ளூர் காய்கறி விற்பனையாளர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பிரத்யேக வாகனங்கள் மூலம் தினசரி காய்கறி மற்றும் அத்தியாவசிய காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சிப் பகுதிக்கு 113 வாகனங்களும், பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் நகராட்சிப் பகுதிகளுக்கு 48 வாகனங்கள், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம் மற்றும் ஒடுகத்தூர் பேரூராட்சிப் பகுதிகளுக்கு 34 வாகனங்கள், இதர பகுதிகளுக்கு 244 வாகனங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 437 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகைப் பொருட்கள் இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.
இது மட்டுமின்றி, 90 தள்ளுவண்டிகள், கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி சார்பில் 12 வண்டிகள் காய்கறி விற்பனைப் பணியில் ஈடுபட உள்ளன.
இந்த வாகனங்களில் வீட்டுக்குத் தேவையான வெங்காயம், தக்காளி, உருளை, வெண்டைக்காய், கோஸ், அவரைக்காய், கேரட், கத்திரிக்காய், பச்சை மிளகாய், முள்ளங்கி, பூண்டு, முருங்கைக்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நூக்கல் மற்றும் மளிகைப் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் கிடைக்கும். காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விலை உயர்வைக் கண்காணிக்க அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்களை நடமாடும் வாகனங்கள் மூலம் பெற்றுக்கொண்டு ஊரடங்கு காலத்தில் வெளியே வராமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பு தர வேண்டும்".
இவ்வாறு வருவாய் அலுவலர் பார்த்தீபன் கூறினார்.
நிகழ்ச்சியில், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், பொது விநியோக திட்டம் துணை பதிவாளர் அருட்பெரும்ஜோதி, கற்பகம் கூட்டுறவு மார்க்கெட் கண்காணிப்பாளர் ஏழுமலை, ஆட்சியர் அலுவலக மேலாளர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் காய்கறி மற்றும் மளிகைப்பொருட்கள் விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.