தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாகவும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சிறிய, நடுத்தர மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தனியார் மருத்துவமனைகள் வாரிய (தமிழகம்) தலைவர் மருத்துவர் தர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் தொடங்கி ரூ.70 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்தன.
தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்ட மு.க.ஸ்டாலின், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் கட்டணத்தை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு ஏற்கும் எனஅறிவித்தார். இதற்கிடையில், தனியார் மருத்துவமனைகளுக்கான சிகிச்சை கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.
அதில், ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைக்கு ரூ.15 ஆயிரமும், ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சைக்குரூ.25 ஆயிரமும், தீவிர சிகிச்சைப்பிரிவில் ஊடுருவாத வென்டிலேட்டர் சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரமும், வென்டிலேட்டர் வசதியுடன் கூடியதீவிர சிகிச்சைக்கு ரூ.35 ஆயிரமும் ஒருநாள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தனியார் மருத்துவமனைகள் வாரியம் (தமிழகம்) தலைவர் மருத்துவர் தர் கூறியதாவது:
தமிழக அரசு முன்பு அறிவித்த கரோனா சிகிச்சை கட்டணம் போதுமானதாக இல்லை. தீவிர சிகிச்சை கட்டணத்தை ரூ.22,300 ஆக உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ரூ.35 ஆயிரம் அளவுக்கு கட்டணத்தை அரசு உயர்த்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வருக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரிய மருத்துவமனைகள் (கார்ப்பரேட்) அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அளவுக்கு அதிகமாக வசூலிக்கின்றன. அவைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஒரு சில சிறிய, நடுத்தர தனியார் மருத்துவமனைகள் கட்டணம் அதிகமாக வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை பாய்கிறது. இருப்பினும் தற்போது அரசு அறிவித்த கட்டணம் எங்களுக்கு போதுமானதாக உள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற சிறிய, நடுத்தர தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். முதலமைச்சரின் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் முற்றிலும் இலவசமாக சிகிச்சை பெற முடியும்.
தகுதியானவர்கள் சில மணிநேரங்களில் இ-காப்பீட்டு அட்டை பெற்று இலவசமாக சிகிச்சை பெறலாம். கப்பீட்டு அட்டை இல்லாதவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்கப்படாது.