முழு ஊரடங்கின்போது, ஆன்லைன் ஆர்டர்களை சொந்த வாகனங்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் இருப்பிடங்களுக்கு சென்று விநியோகம் செய்யலாம் என பல்பொருள் அங்காடிகளுக்கு மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கின்போது, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து மொத்த காய்கறி வியாபாரிகள், பல்பொருள் அங்காடிகள்,உணவக உரிமையாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடப் பட்டது. அதன்படி, பல்பொருள் அங்காடிகள் தங்களுக்கான ஆன்லைன் ஆர்டர்களை சொந்தவாகனங்கள் மூலமாக வாடிக்கை யாளர்களின் இருப்பிடங்களுக்கு சென்று விநியோகம் செய்யலாம். காய்கறிகள், பழ வியாபாரிகள் மற்றும் உணவகங்கள் சொந்த வாகனங்கள் மூலமாக வாடிக்கை யாளர்களின் தேவையின்பேரில் விநியோகம் செய்யலாம்.
இதில் ஈடுபடும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது லாரிகள், சரக்கு வாகனங் களுக்கு மாநகராட்சியிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும். மொத்த கொள்முதல் என்ற அடிப்படையில் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவும் மாநகராட்சி அனுமதி கடிதம் அவசியமானது.
இதற்கென மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப் பட்டுள்ளார். வியாபாரிகள் அவர்களை தொடர்புகொண்டு, விதிமுறைகளின்படி வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்யலாம். சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.