திருப்பூர் மாவட்டத்தில் தேவையான அளவுக்கு கரோனா கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, திருப்பூர்மாவட்டத்தில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,466பேருக்கு கரோனா தொற்று உறுதியானது; 23 பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய சூழலில் திருப்பூரின் பல்வேறு இடங்களில் அரசுப்பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலம்பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுவரும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார்.
ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வ ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது, "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான மருத்துவ சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்டபகுதிகளிலும் கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. அதன்படி, வேலம்பாளையம் அரசுமேல்நிலைப் பள்ளியில் 100 படுக்கைகள் வசதியுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.
இதைத்தொடர்ந்து, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, குமரன் மகளிர் கல்லூரி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களை அமைச்சர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.