தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே ஜஸ்கிரீம் டப்பாவில் வெடிகுண்டு இருந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பேராவூரணி அருகேயுள்ள வீரியங்கோட்டையைச் சேர்ந்தவர் ஊராட்சித் தலைவர் வேலுச்சாமி(45). இவரது வீட்டின் அருகில் நேற்று முன்தினம் ஒரு ஐஸ்கிரீம் டப்பா கிடந்துள்ளது. அந்த டப்பாவை அவர்களது நாய் கவ்விக் கொண்டு வந்துள்ளது. இதைப் பார்த்த வேலுச்சாமியின் மகன், டப்பாவை ஆராய்ந்துள்ளார். அப்போது, டப்பாவின் ஒரு பகுதியில் பைப் வைக்கப்பட்டிருந்ததாலும், வழக்கத்துக்கு மாறாக அந்த டப்பா கனமாக இருந்ததாலும் சந்தேகமடைந்த அவர், பேராவூரணி போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த போலீஸார் ஐஸ்கிரீம் டப்பாவை பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். தஞ்சையில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதை பரிசோதித்துப் பார்த்ததில், உள்ளே வெடிமருந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதை செயலிழக்கச் செய்தனர். வெடிகுண்டை வைத்தது யார் என்பது குறித்து பேராவூரணி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.