விஜய் ரசிகர் மன்றம் சார்பில்செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தினமும் நோயாளிகள், அவரது உறவினர்கள், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா பரவலை தடுக்கஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையோரத்தில் வசித்து வந்தவர்கள், ஆதரவற்றவர்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் தினமும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பசியால் வாடும் சுமார் 300 பேருக்கு நேரில் சென்று உணவுகளை வழங்கி வருகின்றனர். இந்த கரோனா காலகட்டத்தில் விஜய் ரசிகர்கள் உணவு தயார் செய்து கொடுத்து வரும் செயலை மக்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள்.
இதுகுறித்து விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி பாலாஜி கூறியதாவது:
ஊரடங்கு என்பதால் உணவு கிடைக்காமல் சிரமப்படுபவர்களுக்கு உணவு வழங்க ரசிகர் மன்றம் சார்பில் முடிவு செய்தோம்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் செங்கல்பட்டு அரசுமருத்துவமனை முன்பு தினமும் 300 பேருக்கு குறையாமல் ஆதரவற்றவர்கள், நோயாளிகள் அவர்களின் உறவினர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறோம். மேலும் அங்கு பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள் ஆகியோருக்கும் உணவுகளை வழங்குகிறோம். அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கும் முடியும் வரை இந்த பணி ரசிகர் மன்றம் சார்பில் தொடர்ந்து நடைபெறும் என்றார்.