சிவகங்கை மாவட்டம், பிரான்மலை அருகே வெளியூர் நபர்கள் வருவதைத் தடுக்க ஊர் எல்லையில் வேப்பிலை வேலி அமைத்து கிராம மக்கள் காவல் காத்து வருகின்றனர்.
பிரான்மலை அருகே மதகுபட்டி, காந்திநகர் கிராமங்களில் 400-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தற்போது தமிழகத்தில் கரோனா 2-வது அலையால் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த முறை தொற்று பாதிப்பு கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை.
இதையடுத்து மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பலரும் கட்டுப்பாடின்றி சுற்றி வருகின்றனர். இதனால் மதகுபட்டி, காந்திநகர் கிராம மக்கள் வேப்பிலை கட்டிய கயிற்றால் ஊர் எல்லை முழுவதும் வேலி அமைத்துள்ளனர். அப்பகுதிகளில் சுழற்சி முறையில் ஆட்களை நியமித்து காவல் காக்கின்றனர். தேவையின்றி வெளிநபர்கள் யாராவது வந்தால் அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் வந்தால், கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே அவர்களை ஊருக்குள் அனுமதிக்கின்றனர்.