தரமற்ற பாதுகாப்பு உடை புதுச்சேரியில் வழங்கப்படுவதாகவும், நன்கொடை பெற்று இவ்வுடையை பெறுகிறோம். ஆளுநருக்கும் கடிதம் அனுப்பியும் பலனில்லை என்று சுகாதாரத் துறையினர் சராமரியாக குற்றம் சாட்டியுள்ளனர். பிபிஇ கிட் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்த திமுக வலியுறுத்தியுள்ளது.
புதுவையில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சென்றது. இதனால் தனியார் மருத்துவமனைகளையும் அரசு ஏற்று செயல்படுகிறது. தற்காலிகமாக டாக்டர்கள், செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் சுகாதாரத்துறை ஊழியர்களின் பணிச்சுமை குறையவில்லை. இதனிடையே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 6 பேர் இம்மாதத்திலேயே இறந்துள்ளனர்.
இதனால் சுகாதாரத்துறையினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தங்களை காப்பாற்ற உயிர் காக்கும் உபகரணங்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஆச்சிஜன் படுக்கை, வென்டிலேட்டர் வசதி, மருந்து ஆகியவற்றை தட்டுப்பாடின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்னர். மேலும் சுகாதாரத்துறை ஊழியர்களும், தன்னார்வலர்களும் பேசும் ஆடியோ பதிவுகள் வெளியாகி வருகிறது.
சுகாதாரத்துறை ஊழியர் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது," எங்களுக்கு எந்த நஷ்டயீடும் தேவையில்லை. தரமான பிபிஇ கிட் வாங்கி தந்தால் போதும். தற்போது வழங்கும் உடையை ஒரு மணி நேரம் கூட போட முடியவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதனை கழற்றிப்போடும் நிலை ஏற்படுகிறது. சுகாதாரத்துறை செயலர், ஆளுநருக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை.
தரமான கிட் கேட்க கடிதம் அனுப்பி ஒரு மாதம் ஆகிறது. நன்கொடையாக நிதி பெற்று கதிர்காமம் மருத்துவமனைக்கு ரூ.ஒரு லட்சம், அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.56 ஆயிரத்தில் பிபிஇ கிட் வாங்கி கொடுத்தோம். எவ்வளவு நாள் நன்கொடை வாங்கி, பிச்சையெடுத்து வாங்கித்தர முடியும். எங்களுக்கு உயிர் பாதுகாப்போடு வாழ பிபிஇ கிட் அளித்தால் போதும். நஷ்டஈடு, ஊக்கத்தொகை, போனஸ் எதுவும் வேண்டாம். இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்க போகிறோம் என தெரியவில்லை. சக ஊழியர்கள் இறப்பதால் மற்றவர்கள் மன அழுத்தம், மன உளைச்சல் அடைகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.
தெற்கு மாநில திமுக அமைப்பாளர் எம்எல்ஏ சிவா இதுபற்றி கூறுகையில், "பிபிஇ கிட் தரமாக இல்லை என்று ஆடியோவை செவிலியர் வெளியிட்டுள்ளார். தரமற்ற முறையில் அவர்களுக்கான பாதுகாப்பு சாதனங்கள் இருந்ததால்தான் மனக்குமுறலை வெளியே தெரிவித்துள்ளனர்.
இதற்காக அந்த செவிலியர் மீதோ, குறைகளை தெரிவித்தோர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்கள் கேட்டப்படி தரமான பாதுகாப்பு உடையையும், சாதனங்களையும் தரவேண்டும். தரமற்ற பாதுகாப்பு கவச உடை வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.