சுகாதார ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பால் புதுச்சேரி அரசு, செயலர், இயக்குநருக்கு எதிராக சுகாதார ஊழியர்கள் கண்டன கோஷங்களை அரசு மருத்துவமனையில் எழுப்பினர்.
கரானோ பெருந்தொற்றால் மருத்துவ அதிகாரி மோகன்குமார், செவிலிய அதிகாரி நிரஞ்சனா, சுகாதார ஆய்வாளர் .ஆனந்த், நர்சிங் ஆர்டர்லி ரங்கநாதன், அனுசுயா, வார்டு அட்டெண்டன்ட் மாயகிருஷ்ணன் மற்றும் ஒய்வு பெற்ற பைலேரியா இன்ஸ்பெக்டர் பக்கிரி ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் (CHEA) சார்பில் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சம்மேளனத் தலைவர் கீதா, துணை தலைவர் நீனாதேவி ஆகியோர் தலைமை தாங்கினார்.
அரசு ஊழியர்கள் சம்மேளன தலைவர் பிரேமதாசன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் சேகர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
அரசு பொது மருத்துவமனை செவிலிய அதிகாரிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் திரளாக கலந்துக்கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சி முடிவில் முன்களப்பணியாளர்களின் உயிரை காக்க தவறியதாக குற்றம்சாட்டி புதுச்சேரி அரசு, சுகாதார செயலர் மற்றும் சுகாதார இயக்குநர் ஆகியோரை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.
சுகாதார ஊழியர்கள் தரப்பில் விசாரித்தபோது, "தொடர் உயிரிழப்பு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறையில் நோய்த் தடுப்பு பிரிவில் பணிபுரிகின்ற சுகாதார ஆய்வாளர் ஆனந்த் கடந்த 10 நாட்களுக்கு முன் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது இறந்துள்ளார்.
சென்ற வாரம் அவருடைய தந்தை நோய்த் தோற்றால் உயிர் இழந்திருந்தார். இதேபோல் செவிலியர் அதிகாரி நிரஞ்சனா கடந்த 12 நாட்களாய் கரோனா பாதித்து அரசு கோவிட் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்தார்.
கரோனா நோயாளிகளுக்கு Tocilizumab என ஊசியை செலுத்தினால் பிழைக்க வாய்ப்பு இருக்கும் என உடன் பணியாற்றிய செவிலியர்கள் துணைநிலை ஆளுநருக்கு இமெயில் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. ஆனால் நிரஞ்சனா இறந்துவிட்டார்.
பிறகு விசாரித்தபோது, ஜிப்மரில் 200 ஊசி உள்ளதும், முன்னுரிமை அடிப்படையில் ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்படுவது தெரிநத்து. ஆனால் இந்த ஊசி இருப்பதை அரசு மூடி மறைத்துவிட்டது. இந்த ஊசி யாருக்கு வாங்கி வைத்துள்ளனர்" என்று கேள்வி எழுப்பினர்.