கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையங்களை புதுச்சேரியில் துவங்க அம்மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் குழுமத்தினர் உறுதி தந்துள்ளனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை தெலுங்கானா ஆளுநராக இருப்பதால் அங்கு சென்றுள்ளார்.
தெலுங்கானா ராஜ்பவனில் காணொலியில் நடந்த நிகழ்வில் கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் தயாரிக்கும் முயற்சியிலும், மத்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ கண்டறிந்துகரோனா சிகிச்சைக்கு பயன்தரும் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 2 டிஜி மருந்தை தயாரிக்கும் நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரிஸ் நிறுவன தரப்புடன் ஆளுநர் தமிழிசை கலந்துரையாடினார்.
ஸ்புட்னிக் தடுப்பூசி தற்போது தெலுங்கானாவில் மூன்று இடங்களில் தயாரிக்கப்படுகிறது. அதேபோல் தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையங்களை புதுச்சேரியில் ஆரம்பித்தால் வேலைவாய்ப்பும், கரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் அதிக பயன் அளிக்கும்என்று ஆளுநர் கோரிக்கை வைத்தார்.
இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக டாக்டர் ரெட்டிஸ் குழுமத்தினர் உறுதி தந்தனர். சாத்தியக்கூறுகள் தென்பட்டால் புதுச்சேரி முதல்வரோடு கலந்து ஆலோசித்து அதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.